நேற்று முழைத்த காளான் நாத்தீகம் என்று முழங்குகிறது என்று நகைக்காதீர்கள் நண்பர்களே உங்கள் கடவுள் என்ற கருத்து உருவான காலந்தொட்டே அதை நிறுத்து என்ற குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. முற்காலத்தில் மன்னர்கள் மதகுருமார் பிடியில் அகப்பட்டதனால் அறிவுக்கருத்துக்களை வெளியிட்டு மனித சிந்தனைக்கு களம் திறந்த அறிஞர்களை அழித்தார்கள். ஆனால் உண்மைகள் நீண்டநாள் உறங்காது என்பதை பகுத்தறிவின் வளர்ச்சியும் பார்ப்பானின் வீழ்ச்சியும் பறைசாற்றுகின்றன.
ஆதியிலே மனிதன் ஆடையின்றி இலைகள் குழைகள் அணிந்து, பச்சை இறைச்சி உண்டு,மரங்கள் குகைகளிலே மொழிகள் எதுவும் தெரியாமல் விலங்குகள் போலே தாவித்திரிந்த அவனுக்கு, எல்லாம் வல்லதாய் எங்கும் நிறைந்த இறைவன் இருக்கின்றான் அவனை அடைவதே வாழ்வின் பேரின்பம் என்றும் இறைவனுக்கு மலர் தூவி பால், பழம், பொங்கல் படைத்து கோயில் ஒன்று கட்டி (இந்த ஆகம விதிமுறைகள் எப்பொழுது தோன்றின?) வழிபடவேண்டும் என்றெல்லாம் எண்ணங்கள் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே கடவுள் என்ற எண்ணம் இல்லாத காலத்தில் மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்பதே திண்ணம்.
கடவுளின் வருகை
காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்து வந்த மனிதன் கொடிய விலங்குகளோடு போராடினான், அவற்றைக்கண்டு அஞ்சி நடுங்கினான், சிறிய ஒலிகள் அசைவுகளைக் கண்டு ஒடி ஒழிந்தான், இயற்கையின் கொடுமைகளைக்கண்டு பயந்து நடுங்கினான், இடி மின்னல், காட்டுத்தீ, புயல், மழை போன்றவற்றின் இடைவிடாத தாக்கத்தினால் பெரிதும் அச்சமடைந்தான். இவை யாவும் மனிதனிலும் சக்திவாய்ந்தவர்களால் மறைந்து நின்று செய்யப்படுகிறது என்று எண்ணி அவற்றை வணங்கினான். ஈற்றில் மனிதனது அச்சமே கடவுள் கொள்கையின் மூலப்பொருள் ஆயிற்று. இன்னும் கூட மனிதர்கள் தனக்கு விருப்பமில்லாத செயல்கள் நடந்துவிடும் அல்லது தனது விருப்புக்கள் நிறைவேறாது போய்விடும் என்ற பயம் ஏற்படும் போதுதான் கடவுள் என்று நாடுகிறார்கள். ஆகவே கடவுள் கொள்கையானது அச்சம் காரணமாகவும் அறியாமையினாலும் வளரலாயிற்று.
காலம் செல்லச்செல்ல நாகரீக வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் கடவுள்களும் வளர்ச்சியடைந்தன. மனிதன் தன்னுடைய உருவத்திற்கு ஒப்பாக கடவுளைப் படைத்தான். தன்னுடைய கலாச்சாரம் வாழ்க்கை முறைக்கு ஏற்றாற்போல் விதிமுறைகளை வரையறை செய்தான். இவ்வாறு தோற்றம் பெற்ற கடவுட்கொள்கையானது மத பூதமாய் வளர்ச்சி பெற்று சமூகரீரியான பாகுபாடுகளை ஏற்படுத்தி மக்களைப்பிளவுபடுத்தி கொலை, கொள்ளை என குற்றச்செயல்களின் உந்து சக்தியாய் விளங்குகிறது.
கடவுள் என்பது பொருளற்ற கற்பனை, பொய்யர்களின் புகலிடம், வஞ்சகர்களின் வாய் மந்திரம், அறியாமையின் பிறப்பிடம், அச்சத்தின் அடையாளம், பகுத்தறிவுக்குப் பகை, இன்பத்தின் எதிரி, முன்னேற்றத்தின் தடை மொத்தத்தில் வேண்டாத சொல்!
Alivetamil blog
0 comments:
Post a Comment