காஷ்மீர் பிரச்னை என்பது இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான பிரச்னை என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது போன்றும், காஷ்மீரிகளின் அடையாளம் மற்றும் சுதந்திர வேட்கைக்கான போராட்டம் என்றும், இந்திய இராணுவப் படையினர் போராளிகளிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றிவிடவே நடத்தப்படும் யுத்தம் என்றும், இந்திய ராணுவத்தினரிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றவே போராளிகள் நடத்தும் யுத்தம் என்பதாகவும் பல கண்ணோட்டங்களில் பார்க்கப்படுகிறது.எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் ஒன்று மட்டும் தெளிவாகிறது, காஷ்மீர் மக்கள் விடுதலை ஒன்றையே விரும்புகிறார்கள். நாங்கள் இந்தியர்களல்லர் பாக்கீஸ்தானிகள் அல்லர் நாங்கள் காஷ்மீரியர்கள் என்பதையே ஓர்மமாக உரத்து ஒலிக்கிறார்கள்.
காஷ்மீரில் இரண்டு தசாப்த காலமாக நிலைகொண்ட பதட்டம் நாளுக்கு நாள் பூதாகாரமாகிக் கொண்டே போகிறது.ஆனால்இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்கள் மனித உரிமை மீறல்கள் சர்வதேசத்தின் காதுகளில் மெதுவாகத்தான் ஒலிக்கிறது. இஸ்லாமிய புரட்சிகளையெல்லாம் பயங்கரவாத செயல்லளாகவே பார்த்து வருகின்ற மேற்குலகம் இந்திய அரசின் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்றே கூறமுடியும். அரச துணை குழுக்களும். மானில காவற்துறையினரும், தேசிய இராணுவத்தினரும் செய்து வருகிகின்ற கொலைகள், கற்பளிப்புக்கள், சட்டவிரோதமான ஆட்கடத்தல்கள் எல்லாம் மானில அரசினாலும், மத்திய அரசினாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை, மாறாக அவற்றை மறைக்கும் சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
மோதல்களில் கொலை செய்யப்பட்ட அப்பாவிகள் கூட தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர் என்பதற்கு 2004 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தினர் நடத்திய பத்ரபால் படுகொலை ஒரு சான்றாகும்.
சில நேரங்களில், இந்திய ராணுவத்தினர் நடத்திய படுகொலைகளை மறைக்க, போராளிக் குழுக்கள் படுகொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்திய ராணுவத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலை போக்கில் இருந்து மனித உரிமையாளர்களும் கூட தப்பவில்லை. 1996 ஆம் ஆண்டு, மனித உரிமையாளர் அன்டிராபி அவர்களின் படுகொலை இதற்கு சான்றாகும்.அன்டிராபியின் படுகொலையை நிகழ்த்திய ராணுவப் படை தலைவர் மேஜர் அவ்தார் சிங் மீது 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
2009 ஆம் ஆண்டு நடந்த ஷோபியன் கூட்டு பாலியல் வன்முறையில் காவல் துறையின் அட்டூழியத்தை மறைக்க மத்திய, மாநில அரசு மேற்கொண்ட பிரயத்தனங்கள் இதற்கு சான்று பயிலும்.
இது போன்ற முடிவற்ற பட்டியல்கள் தான் காஷ்மீர் மக்களை இந்திய தேசத்திலிருந்து அந்நியப்படுத்துகிறது.
நவம்பர் 2006க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட ஒரு நேரடி ஆய்வில் காஷ்மீரத்தின் பண்டிபோரா, பாராமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களைச் சேர்ந்த 52 கிராமங்களில் உள்ள 2,700 விவரம் அறியப்படாத, அடையாளம் காணப்படாத 2,943க்கும் மேலான சடலங்களைக் கொண்ட புதைகுழிகள் குறித்து இங்கு ஆவணப்படுத்தப்படுகிறது.
இவ் ஆவணம், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டகரல் ஸ்டெடியில் தொல்லியல் பிரிவு பேராசிரியரான முனைவர் அங்கனா சட்டர்ஜி, காஷ்மீர் பிரச்னை மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆன வழக்கறிஞர் பர்வேசு இம்ரோசு, இ.பி.டபிள்யூ, என்ற பத்திரிகையில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கௌதம் நவ்லாகா, காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணி என்ற அமைப்பின் துணைத்தலைவரான சாஹிர் உத்தின், மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்கறிஞர் மிஹிர் தேசாய், ஜம்மு காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணியின் திட்ட ஒருங்கிணைப்பாளரான குர்றம்பர்வேசு ஆகியோர் அடங்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டது.
1999-2009ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் மோதல்களிலும், போலி மோதல்களிலும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சடலங்களைக் கொண்ட
புதைக்குழிகளைக் குறித்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் ஆய்வு செய்தது. நீதிக்கு புறம்பாகவும், ஒருதலைப் பட்சமாகவும், முகாந்திரம் ஏதும் இன்றியும் படுகொலைசெய்யப்பட்டவர்களின் (இந்திய ராணுவத்தினராலும், துணை ராணுவத்தினராலும்) உடல்கள் இப்புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் 2,373 புதைகுழிகளில் (87.9 விழுக்காடு) பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 154 புதைகுழிகளில் இரண்டுக்கு மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. 23 புதைகுழிகளில்இரண்டுக்கும் மேற்பட்ட, மூன்றில் இருந்து 17 வரையிலான சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன.
பல சடலங்கள் அடங்கிய புதைகுழி என்பதை வழக்கமாக, ஒன்றுக்கும் மேற்பட்ட, அடையாளம் அறியப்படாத, மனித சடலங்கள் அடங்கிய புதைகுழி என அடையாளப்படுத்தலாம்.
மானுடத்திற்கு எதிரான போர்க் குற்றங்களும், இனப்படுகொலைகளும் நடத்தப்படும்போது தான் பல சடலங்கள் அடங்கிய புதைகுழிகள் காணப்படுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.(தகவல்: குடியுரிமை பாதுகாப்பு நடுவம்; 17, பாலாஜி மேன்சன், முள்ளுவாடி கேட் அருகில், சேலம் 1)
1989க்கும், 2009க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம் ராணுவ மயமாக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட வன்முறையில் 70,000க்கும் மேற்பட்ட சாவுகள் நிகழ்ந்துள்ளன. இப்படுகொலைகள்,சட்டத்திற்கு புறம்பான அல்லது போலி மோதல்கள், படுகொலைகள்,சிறைக் கொடுமைகள், பிற வழிகளிலான கொடுமைகள் மூலமாக அரசு மேற்கொண்டு வருகின்ற பயங்கரவாதச் செயல்கள் தடுக்கப்பட்டு காஷ்மீர் மக்களின் வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனில் சுதந்திர காஷ்மீரே தீர்வாக முடியும்.
0 comments:
Post a Comment