துள்ளி விளையாடவேண்டிய பருவம், பள்ளி சென்று படிக்கவேண்டிய வயது அந்த சிறுவனைப்போய் வயல் வேலைகளை செய்யுமாறு உத்தரவிடுகிறார் தந்தை ஷன்செங். இவன் பின்னாளில் வளர்ந்து ஒரு பெரிய சமூக புரட்சியை சீனதேசத்தில் ஏற்படுத்தி மாவோ சேதுங் என்ற சீன கம்யூனிசத்தலைவனாக வருவான் என்று அவருடைய தந்தை கனவிலும் நினைத்திருக்கமாட்டார். ஷன்செங்கை பொறுத்தவரை மாவோ ஒரு பொறுப்பற்ற மகனாக, தந்தை சொல் கேட்காதவனாக, தந்தையை எதிர்த்து பேசுகின்ற வாயாடியாகவே பார்க்கப்பட்டான். ஷன்செங் ஆரம்பத்தில் ஒரு ஏழை விவசாயியாகத்தான் இருந்தார் எனினும் சிறிது சிறிதாக பணம் சம்பாதித்துசின்னச்சின்ன முதலீடுகளை செய்து குறுகிய காலத்துக்குள்ளேயே பெரிய பணக்காரராக வளர்ச்சியடைந்தார். ஏக்கர் கணக்கான நிலங்களுக்கு சொந்தக்காரரானார், அவருக்கு கீழே பல தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினார். பணம் பெருகப்பெருக வட்டிக்கு விடும் தொழிலையும் ஆரம்பித்தார்.
மாவோ பிறந்த நேரம்(19 மார்கழி 1893) அவருக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது. இப்படிபட்ட குடும்பத்தில் பிறந்த மாவோ எப்படியான சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும். ஆனால் மாவோவின் தந்தை ஷன்செங் மிகவும் கண்டிப்பானவர். மாவோவை சிறுவிடையத்திற்கும் தண்டிப்பது, திட்டுவது எல்லாம் அவனுக்குள் வெறுப்பை உண்டாக்கியது.
மாவோவிற்கு ஏழு வயதானபோது, அவன் கையை பிடித்து இழுத்துவந்து வயல் வேலைகளில் இறக்கிவிட்டார் அவன் தந்தை ஷன்செங்.
மாவோ இனியும் நீ குழந்தை கிடையாது. உன் சொந்தக்காலில் நிற்க நீ பழகிக்கொள்ள வேண்டும். இது நம் பரம்பரை வயல். இதைக்கொண்டுதான் நான் செல்வந்தனானேன். மாடு போல் உழைக்கக் கற்றுக்கொள். உன் கால்களை சேற்றிலும் மணலிலும் முள்ளிலும் பதித்துப் பழகிக்கொள். இங்குள்ள விவசாயிகள் செய்யும் அத்தனை வேலைகளையும் பார்.
நான் இடும் கட்டளைகளை நிறைவேற்றிக்கொள் என ஷன்செங் உத்தரவிட்டார். இவையெல்லாம் அவனுக்கு சிரமங்களை ஏற்படுத்தின. சில சமயங்களில் தந்தையுடன் வாக்கு வாதப்படுவான் பின்னர் தந்தை மீதுள்ள பயத்தால் வேலைகளை கவனிப்பான். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த முதுகை வளைத்து வேலைசெய்யும் மகத்துவத்தை அவன் உணரவேண்டும். உழைப்பின் அருமை புரிந்தால்தான் பணத்தின் அருமை புரியும் அதன் மூலம் தான் அவனுக்கு செலவை கட்டுப்படுத்தும் திறன் வளரும். இவற்றை மாவோ உணர்ந்தால் தான் ஒரு காலத்தில் என்னைப்போன்று வசதியாக வாழ்வான் என்பது ஷன்செங்கின் நம்பிக்கை. ஆனால் இவற்றை கேட்கும் போது மாவோவிற்கு வேப்பம் பூவை உண்பது போல் கசக்கும்.
மாவோவிற்கு எட்டு வயதாகும் பொழுது அவனது கிராமத்திலுள்ள ஒரு சிறிய பாடசாலையில் சேர்க்கிறார் ஷன்செங். மாவோவிற்கு அளவற்ற மகிழ்ச்சி தந்தையின் பிடியில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்கிறது, இனி பள்ளி நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கனவு கண்ட மாவோவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
மாவோவின் கனவு பொய்த்துப்போனது. அவன் சேர்ந்த பள்ளி மிகமிக கண்டிப்பானது. நேரத்திற்கு வரவேண்டும். பாடங்கள், வீட்டுப்பாடங்கள் எல்லாம் அவனுக்கு சுமை போலத்தோன்றின. அதை விட அவனது வகுப்பாசிரியர் மிகவும் கோபமானவர் கடுமையாக தண்டிப்பார். ஆசிரியரை விட அப்பா மேல் என அவனது மனம் சிந்தித்தது.
தனது பதின்மூன்று வயதுவரை(1906 ஆம் ஆண்டு வரை) இந்த பள்ளியிலே தனது படிப்பை தொடர்ந்தான். சீன மொழியை விரும்பிக்கற்க ஆரம்பித்தான். இதனால் அவனுக்கு சீன நூல்களை கற்கும் ஆர்வம் ஏற்பட்டது. நிறைய புத்தகங்களை படிக்க ஆரம்பித்தான். பாடசாலைக் கல்வி முடித்தபின்பு புத்தகங்கள் படிப்பதால் தந்தையிடம் இருந்து ஆங்காங்கே எதிர்ப்புக்கள் வரும் எதிர்த்து வாக்கு வாதப்படுவான். சில நேரங்களில் பயந்து பயந்து கூட புத்தகங்களை படிப்பான். சீனப்புராணங்கள், சீனாவின் பண்டைய பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை விவரிக்கும் மாய, மந்திரக்கதைகள் போன்றவற்றை விரும்பிப்படிப்பான்.
அப்பொழுது சிறுவனான மாவோவிற்கு சீன வரலாறுகள் தெரியாது. உலகநாடுகள் பற்றியும் பெரிதாகத்தெரியாது. இருந்தாலும் சீனாதான் இவற்றை விட ஒருபடி மேல் என்று நினைத்து கொண்டிருந்தான். ஆனால் இவை உண்மையல்ல என புத்தகங்களை படித்து தெரிந்து கொண்டபோது மாவோ கவலைப்பட்டான். புத்தகங்கள் இவற்றை தெளிவாக அவனுக்கு விளக்கின. சீனாவில் ரயில் வண்டிகள் கிடையாது, நீராவி கப்பல் இல்லை, தொலைபேசிகள் இல்லை இது போன்ற பல உதாரணங்கள்..
இத்தனை சிறப்பான வீரம் படைத்த இதிகாச வரலாற்றை கொண்ட சீனாவா இப்படி பிந்தங்கியுள்ளது? எங்கே தவறு நடந்துள்ளது? சிந்திக்கிறான்.
இதற்கிடையில் மாவோவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறார் ஷன்செங். மீண்டும் ஒரு வாக்குவாதம் சண்டை நடக்கிறது வீட்டில் காரணம் மாவோவிற்கு திருமணம் செய்ய உடன்பாடு இல்லை.
இவற்றிற்கு மத்தியில் சீன தேசத்தை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றான். ஒரு கட்டத்தில் அவன் வாசித்த இலக்கியங்கள் வீரதீரக்கதைகளில் அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. காரணம் ஒரே மாதிரியான கதைகள்; இளவரசன் அல்லது நாயகன் வீரதீரமாகப்போராடுவான் எதிரியை அழிப்பான் பின்னர் இளவரசியை கைபிடிப்பான். வாசிக்கும் பொழுது இவை சுவாரஸ்யமாகத்தான் இருந்தது ஆனால் புத்தகத்தை மூடிவைத்த பின் அவனுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒரு புரியாத புதிர் ஒன்று அவனை சிந்திக்க வைத்தது.
நாள்கணக்கில் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் யோசித்தபோது அவனுக்கு ஒரு விடை கிடைத்தது. கதைகளில் வரும் நாயகர்கள் அனைவரும் ஒன்று போலவே இருக்கிறார்கள் அனைவரும் பெரிய இடத்து சீமான்கள், பண்ணையர்கள், மன்னர்கள், மந்திரிகள், போர்வீரர்கள். இவர்கள் உணவு பற்றியோ, உடைகள் பற்றியோ, ஒழுகும் மேற்கூரைகள் பற்றியோ சிந்திக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு வேளை உணவாவது நாளை கிடைக்குமா என ஏங்க வேண்டியதில்லை. அவர்களுடைய பிரச்சனைகளெல்லாம் ஆடம்பரமானவை, பகட்டானவை.
விவசாயிகள் என்ன ஆனார்கள்? குடியானவர்கள் என்ன ஆனார்கள்? ஏழைகள் என்ன ஆனார்கள் இது பற்றியெல்லாம் யாரும் எழுதுவதில்லை. இவர்களுக்கு தானே எண்ணற்ற பிரச்சனைகள். ஏன் யாரும் இவற்றை கண்டுகொள்ளவில்லை?
அப்பொழுது தான் ஒரு சம்பவம் அவனது நினைவுக்கு வந்தது. ஒரு நாள் வயலில் நெற்கதிர்களை காயவைத்துக் கொண்டிருந்த சமயம் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே ஷன்செங் கத்தினார்.
மாவோ! உடனடியாக கதிர்களை அப்புறப்படுத்து இல்லை என்றால் மழை நாசம் செய்துவிடும்.
உடனே மாவோவும் விரைவாக கதிர்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தான். திடீரென ஒரு யோசனை..
அக்கம் பக்கம் உள்ள ஏழைகளின் நெற்கதிர்களும் அல்லவா பாழாகிவிடும் என்றெண்ணி செய்து கொண்டிருந்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு பக்கத்து வயலுக்கு ஓடினான். இதனால் தந்தையோடு பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்பா அவர்கள் மிகவும் ஏழைகள் விளைபொருள் நாசமாகிவிட்டால் அவர்களால் ஈடு செய்யமுடியாது. குத்தகை பணம் கூட கொடுக்கமுடியாது.
உனக்கு உன்வீடு? முக்கியமா அவர்களுடைய வீடு முக்கியமா? ஷன்செங் கோவமாக கத்துகிறார்.
மாவோ தீர்க்கமான குரலில் சொன்னான்.
அவர்கள் வீடுதான் முக்கியம்.
இப்பொழுது அவனுக்கு எல்லாம் தெழிவாக புரிந்தது. பணம் படைத்தவர்களுக்கு அவர்கள் மீது மட்டுமே அக்கறையாக இருக்கிறார்கள். மற்றவர்கள் எக்கேடு கெட்டுபோனாலும் சரிதான். ஏழைகளின் பிரச்சனைகளை கதையாக எழுதவேண்டிய அவசியம் இல்லை போல. இதையெல்லாம் யார் வந்து மாற்ற போகிறார்கள் என்று மாவோ சிந்திக்கிறான். முதலில் இந்த வீட்டில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்றெண்ணி வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
0 comments:
Post a Comment