கடவுளே இல்லை என்று உலகுக்கு போதித்தவன் புத்தன் அவனையே கும்பிடுகிறான் ஒரு பித்தன். ஆம் நண்பர்களே பெளத்தம் என்பது இல்லறம் செழிக்கும் நல்வாழ்விற்கான பாதை அல்லது ஒரு தத்துவம். வாழ்வை இன்பமாக கழிக்க உலக ஆசைகளை துறக்கவேண்டும், அன்பை மட்டுமே வளர்க்க வேண்டும்; அமைதியான தியானத்தின் மூலம் மனிதன் இந்த ஞானத்தை அடையவேண்டும் என்கிறார் புத்தர்.
இரக்கத்தோடும் உபகார சிந்தையோடும் இருப்பது மகிழ்ச்சியோடு இருப்பதாகும்.
உலகத்தில் உள்ளும் புறமும் அறிவற்ற வஸ்து எதுவும் கிடையாது. உலகத்தின் பொருள்கள் யாவும் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண் டேயிருக்கின்றன. தோன்றியது அழியும்.
கோவணாண்டி கோலமோ ஜடை முடியோ, அழுக்கேறிய உடம்போ, பட்டினி கிடத்தலோ, மண்மீது புரளுவதோ, மூச்சை அடக்கி உட்கார்ந்திருத்தலோ, ஆசை வெல்லாத ஒருவனை பரிசுத்தவானாக்கி விடாது.
முட்டாள்களுடன் கூடி வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்.
பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பவனையும் திட்டுகிறார்கள். அதிகம் பேசுபவனையும் திட்டுகிறார்கள். திட்டப்படாத மனிதனே உலகத் தில் இல்லை. எப்பொழுதுமே திட்டப்படுபவனாக அல்லது எப்பொழுதுமே போற்றப்படுபவனாக ஒரு மனிதன் இருந்ததும் இல்லை; இருக்கவும் இல்லை; இருக்கப் போவதும் இல்லை.
இத்தகைய புத்தரின் போதனைகள் ஆரம்ப காலங்களில் நெறிகளாக தத்துவங்களாக விளங்கியது, பின்னர் கால ஓட்டத்தில் இது ஒரு மதமாக தோற்றம் பெற்றுவிட்டது. எவ்வாறு இருந்தாலும் பெளத்த மதத்தவர்கள் இன்று புத்தரின் கொள்கைகளை சரிவர பின்பற்றுகிறார்களா என்பது என் சிற்றறிவிற்கு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
புத்தர் மன்னனாக சகல செளபாக்கியங்களோடு வாழ்ந்த போதும் உலக ஆசைகளையெல்லாம் துறந்து கானகம் சென்று வாழ்ந்தார். மக்களிடம் பிச்சை எடுத்து உண்டார், துறவிகளுக்கும் அவ்வாறே போதித்தார். உணவிற்கு பஞ்சத்தினாலா இல்லை மக்களுக்கு கொடுக்கும் எண்ணம் வளரவேண்டும் என்பதற்காக. இன்று எல்லாம் துறந்த பெளத்த மத துறவிகளின் நிலை என்ன? பிச்சை எடுத்து உண்ணும் துறவி யாரவது இருந்தால் தயவுசெய்து காட்டுங்கள். எல்லாம் துறந்தவர்கள் இன்று பாராளுமன்றம் வரை சென்று பதவிக்காய் ஆசைப்படுகிறார்கள். சிறு எறும்பைக்கூட கொல்லாதே என்கின்றவர்கள், பயங்கரவாதி தீவிரவாதி அவனை கொல் என்று கூச்சலிடுகிறார்கள். கைகலப்புக்கள் சண்டைகள் என்று அவர்களின் பட்டியலில் வன்முறைகள் நீண்டு செல்லுகின்றன.
புத்தர் வலியுறுத்தியது இதைத்தானா? அன்பு செலுத்துங்கள் வன்முறையை தவிருங்கள் என்று இவர்கள் போதித்த காலம் போய் இனி இவர்களுக்கு நாம் போதிக்கின்ற காலம் மலர்ந்திருப்பது வேடிக்கையானதே..
1 comments:
நல்ல பொறுப்பான கட்டுரை.வாழ்த்துக்கள்!
Post a Comment