இயற்கையவள் ஆதரவால் பகல் பொழுதில் கதிரவன் காட்சியளிக்க இரவிலே கார்முகில்கள் மழை பொழிய செல்வச்செழிப்பு எய்தப்பெற்றவனாய் ஒப்பாரும் மிக்காரும் இன்றி நேர்மையோடு இச்சை , வெறுப்பு , பயம் , மாயை ஆகியவற்றை கடந்து செங்கோல் ஓச்சி வந்தான் எல்லாள மன்னன் என்று இந்த ஞாலமே வியந்து போற்றுகையில் நாமும் தமிழன் என்று சொல்லி நெஞ்சை நிமிர்த்துகின்றோம் . இருப்பினும் இரண்டாயிரம் ஆண்டுகளைத் தாண்டி எல்லாள மன்னனது அஸ்தியும் சமாதியும் அதன் மீது பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களும் தந்திரமான முறையில் மறைக்கப்பட்டிருக்கின்றது அல்லது மறுக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறியாமல் எம்மில் பலர் அறியாமல் இருக்கிறோம் என்பதுதான் வருத்தமான செய்தி .
" எல்லாரப்பட்டி மாகரவிற்கு " கிழக்கேயும் அனுராதபுரியிற்கு தெற்குப் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் முதியவனாய் இருந்தபோதும் எல்லாள மன்னன் கடும் சமர் புரிந்து போர்க்களத்தில் வீரகாவியமடைந்தான் . அவனை கெளரவிக்கும் முகமாக யுத்தத்தில் வெற்றியீட்டிய துட்டகைமுனு இதே இடத்தில் எல்லாளனுடைய உடலைத் தகனம் செய்து ஒரு நினைவுத்தூபியையும் கட்டுவித்து ஒரு கல்வெட்டு ஒன்றையும் செதுக்கினான் ( கி . மு 2 ம் நூற்றாண்டு ). அக்கல்வெட்டின் வாசகம் ; " அரசனாய் இருந்தால் என்ன , குடியானவனாய் இருந்தால் என்ன ஒருவருமே இவ்வழியால் பல்லக்கிலோ அல்லது சிவிகையிலோ முரசு கொட்டி எதிர்காலத்தில் செல்லலாகாது ". இந்த மரபானது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு காலாதிகாலமாக பேணப்பட்டு வந்துள்ளது . 1900 ஆண்டு காலப்பகுதி வரைக்கும் எல்லாளனுடைய நினைவுத்தூபியானது மக்களால் மலர் தூவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வந்ததை பல்வேறு வரலாற்று சான்றுகள் எடுத்துகாட்டுகின்றன .
எல்லாள மன்னனுடைய நினைவுத்தூபியானது அவன் இறந்த இடத்தில் கட்டப்பட்டு கி . பி 6 ம் நூற்றாண்டு வரைக்கும் மக்களால் மரியாதை செலுத்தப்பட்டு வருவதாக அதனை கண் கூடாக கண்ட மகாவம்சத்தின் எழுத்தாளர் மகாநாம குறிப்பிடுகின்றார் .
14 ம் நூற்றாணடில் இயற்றப்பட்ட "சத்தர்மாலங்காரய" என்னும் நூல் எல்லாளன் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அவரது பெயருடன் விளங்கிய நினைவுத்தூபி ஒன்றினை துட்டகைமுனு கட்டுவித்தான் என திட்டவட்டமாக கூறுகின்றது.
1818 ம் ஆண்டு பிலிமத்தலாவ என்ற கண்டிய குடும்பத்தலைவன் தனது கிளர்ச்சி நசுக்கப்பட்டு தப்பி ஓடிக்கொண்டிருக்கையிலும் கூட எல்லாளனின் நினைவுத்தூபியை கடக்கும் போதும் தனது சிவிகையில் இருந்து கீழ் இறங்கி மரியாதை செலுத்தினான் என்று வரலாற்று ஆசிரியர்களால் கூறப்படுகின்றது .
1960 ம் ஆண்டு எமேசன் ரெனன்ற் எழுதிய " இலங்கை " என்ற நூலிலே எல்லாள மன்னனுடைய நினைவுத்தூபியானது இன்றும் சிங்கள மக்களால் பயபக்தியோடு வணங்கப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார் .
இது போன்ற பல சான்றுகள் எல்லாள மன்னனுடைய நினைவுத்தூபியானது மக்களால் காலாதிகாலமாக மரியாதை செலுத்தப்பட்டு வந்ததை எடுத்தியம்புகின்றன . ஆனால் இன்று வீர தர்மத்தோடு நாட்டை ஆண்ட மன்னனுடைய நினைவுத்தூபியும் அவனுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளைத் தாண்டி மரியாதை செலுத்தப்பட்டு வருகிற மரபும் சில விசமிகளால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டது . 1948 ம் ஆண்டிலே தொல்பொருள் ஆணையாளராக கடமையாற்றிய செனரத் பரணவிதானவின் ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்ட கோரமான் செய்தி இதனை மேலும் வலுச்சேர்க்கிறது . அக்கூற்று வருமாறு ;" எல்லாளனின் அஸ்திக்கு மேல் அனுராதபுரத்தின் வைத்திய அதிகாரி படுத்து உறங்குகின்றார் என்பது சாத்தியமற்ற ஒன்றல்ல ". இது போன்ற பல கருத்துக்கள் மூலம் அக்காலத்தில் (1948 வரை ) மண்மேடாக காட்சியளித்த எல்லாளனுடைய தூபியையும் அவனது அஸ்தியையும் மறைக்க முயன்றதோடு இல்லாமல் அதனை துட்டகைமுனுவுடையது என மாற்றவும் முனைந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ஆய்வாளர் பரணவிதான .
ஆம் ! முன்னாள் தொல்பொருள் ஆய்வாளராக இருந்த " பெல் " என்பவரின் கருத்துக்களை மேற்கொள்ள காட்டி எல்லாளனுடைய தூபியை துட்டகைமுனுவுடைய நினைவுத்துபி எனவும் இது தக்கன விகாரை என அழைக்கப்படும் என்று 1946 ம் ஆண்டு தனது ஆண்டறிக்கையில் அறிவித்தார் . இவருடைய உத்தரவின் பேரில் அவ்விடத்தில் இம் மண்மேடானது " துட்டகைமுனுவின் கல்லறை " என்ற விளம்பரப் பலகை இடப்பட்டுள்ளது .
ஆனால் பெல்லினுடைய அறிக்கைகளைப் படிப்பவர்களுக்கு பரணவிதானவின் புனைக் கதைகள் தெளிவாக விளங்கும் . பெல்லினுடைய அறிக்கையில் இரண்டு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன . ஒன்று எல்லாளனின் கல்லறை தீபவம்சத்தில் குறிப்பிடப்பட்ட தூபியாக இருக்கலாம் . இரண்டாவது எல்லாளனின் அஸ்தி இடப்பட்ட கல்லறை அமைந்த இடம் தக்கன விகாரைக்கு அண்மையில் இருக்க வேண்டும் . மேலும் பெல்லின் கருத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு தனது விசமத்தனமான வாதங்களை முன்வைக்க முடியாத பரணவிதான மகாவம்ச கதைகளையும் இழுத்து தனது கற்பனை முடிச்சுக்களைப் போடத் தவறவில்லை . மகாவம்சத்தின் கருத்துப்படி அனுராதபுரத்திற்கு தெற்குப் பகுதியிலே ( எல்லாளனின் சமாதிக்கு அண்மையில் ) புனித சமயச் சடங்குகள் நிகழ்த்தப்பட்ட ஒரு பிரதேசம் காணப்பட்டது . இது போன்ற பிரதேசங்களே " மாலக்க " என்று அழைக்கப்படுகின்றன . இந்த பிரதேசத்திலே மகாதூபி அல்லது மகாவிகாரை ஒன்று காணப்பட்டதாகவும் துட்டகைமுனு தனது இறுதி ஆசையில் மகாதூபி தெரியக்கூடிய இடத்தில் அதாவது மகாவிகாரை வளவிற்குள் ( மாலக்க ) தனது உடலை தகனம் செய்யுமாறு கேட்டுக்கொண்டான் எனவும் துட்டகைமுனு தகனம் செய்யப்பட்டதால் இப்புனித பிரதேசம் மாலக்க ஆனது " நிசிம மாலக்க " ஆக மாறியது என மகாவம்சம் கூறுகின்றது .
தொடரும்..
பாகம் 2
Alivetamil blog
internet marketing
0 comments:
Post a Comment