மறைக்கப்பட்ட எல்லாளனின் சமாதி என்ற பதிவின் தொடர்ச்சி.. முதற்பதிவை வாசிக்கவும் பாகம் 1
மகாவம்சத்தை மொழிபெயர்த்த கைகர் "நிசிம மாலக்க" என்ற பதத்தை பின்வருமாறு மொழிபெயர்த்தார். அரசனின் சடலம் மகா விகாரைக்கு வெளியே உள்ள மாலக்கவில் தகனம் செய்யப்பட்டுள்ளது என்று தவறாக மொழிபெயர்த்தார். இதற்குரிய சரியான மொழிபெயர்ப்பை அபய ஆரியசிங்க என்பவர் பிற்காலத்தில் வெளியிட்டார். சரியான மொழிபெயர்ப்பின்படி நிசிம மாலக்க என்பது "வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சடங்குகளுக்கு பொருத்தமில்லாத இடம் ஆகும்". அதாவது மன்னனாக இருந்தாலும் ஒரு உடல் தகனம் செய்யப்பட்டதால் அவ்விடமானது புனித சமயச் சடங்குகளுக்கு பொருத்தமற்றது என்பதால் பெளத்த சங்கத்தினர் இவ்விடத்தை கைவிட்டு தமது சங்க கம்மாவை வேறு இடத்தில் நடத்த விரும்பினார்கள்.
ஆகவே பரணவிதான கைகருடைய தவறான மொழிபெயர்ப்பால் துட்டகைமுனுவின் உடலானது மகா விகாரை வளவிற்கு வெளியே தகனம் செய்யப்பட்டது என்றும் அப்பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள எல்லாளனின் சமாதியை துட்டகைமுனுவினுடையது என்றும் பிழையான முடிவிற்கு வந்தார். அத்தோடு நின்றுவிடாது துட்டகைமுனுவின் பெறாமகனான வட்டகாமின அபய என்பவன் (கி.மு 80-77 ம் ஆண்டு) தக்கன தூபியை கட்டினான். இது துட்டகைமுனுவின் சமாதியின் மீது கட்டப்பட்டது என்ற ஒரு கற்பனையை வெளியிட்டார். இதற்கு எந்தவிதமான இலக்கிய அல்லது வரலாற்று சான்றுகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தக்கன தூபியானது எல்லாளனின் கல்லறைக்கு அண்மையில் கட்டப்பட்டது என்று மகாவம்சம் கூறுகின்றது. ஆனால் அது துட்டகைமுனுவின் நினைவுத்தூபி என்று குறிப்பிடவில்லை. மகாவம்சத்தின் கதாநாயகனாகப் போற்றப்பட்ட துட்டகைமுனுவின் சமாதிதான் தக்கன தூபி எனில் நூலாசிரியர் நிச்சயமாக குறிப்பிட்டிருப்பார் என்பது இங்கு நோக்கத்தக்கது.
எல்லாளனுடைய மண்மேட்டில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டபோது சாம்பல் கரி போன்றவற்றை தாம் கண்டெடுத்ததாகவும் அது துட்டகைமுனுவினுடையது எனவும் பரணவிதான தெரிவித்தார். இங்கு ஒரு வேடிக்கையான விடயம் என்னவெனில் இவருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட உதவித் தொல்பொருள் ஆணையாளராக கடமையாற்றிய கலாநிதி ஆர்.எஸ்.டி சில்வா தான் கரித்துண்டு களிமண் போன்றவற்றை மட்டுமே கண்டதாகவும் சாம்பல் அல்லது அஸ்தி எதனையும் காணவில்லை எனவும் பரணவிதானவிற்கு எதிராக பல வாதங்களை முன் வைத்தார். இந்த விவகாரம் அரசியல் ரீதியாக விஸ்வரூபம் எடுக்க பரணவிதான கண்டெடுத்த அஸ்தியை ஆராய 12 பேர் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டு பிரான்சில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. 1978ம் ஆண்டு நவம்பரில் நியமிக்கப்பட்ட இக்குழுவானது ஆறு மாதங்களின் பின் தனது அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்பித்தது. இவ்வறிக்கையின்படி இவ் அஸ்தியானது துட்டகைமுனுவினுடையது என அறிவிக்கப்பட்டதோடு அனுராதபுரத்திற்கு பேழையிலே பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு நினைவுச் சின்னம் ஒன்று அமைத்து அங்கே வைக்கப்பட்டுள்ளது.
இவ் அஸ்தியினை ஆராய்ந்த குழுவினர் யார்? அவர்களது அறிக்கை எங்கே? பாரிசில் பரிசோதனை நடத்திய விஞ்ஞானிகள் யார்? நிறுவனம் எது? போன்ற பல கேள்விகளுக்கு விடை புரியாத புதிராகவே இருக்கின்றது. பின் நாட்களில் இக்குழுவின் அறிக்கைகள் கசியத் தொடங்கின. இந்த அறிக்கையினுடைய தலைப்பே ஒருதலை பட்சமானது. அதாவது "துட்டகைமுனு மன்னனின் அஸ்தியை ஆராய்வதற்கு என நியமிக்கப்பட்ட உபகுழுவைப் பற்றிய அறிக்கை". இதிலிருந்தே ஆராய்ச்சியின் நடுநிலமை என்பது கண்கூடு. தவறான மொழிபெயர்ப்புகளும், ஆராய்ச்சியாளர்களின் இனவாதப்போக்கும், அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையும் கி.மு இரண்டாம் நூற்றாண்டு தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரை பேணப்பட்டு வந்த மரபினையும் பண்பாட்டினையும் அழித்துவிட்டது அல்லது வரலாற்றையே திரிப்படுத்திவிட்டது எனலாம். தமிழன் தன் வாழ்க்கையை காப்பாற்றவே சிரமப்படுகின்ற இக்காலத்தில் தன் வரலாற்றை எங்கணம் காப்பாற்றப் போகின்றான் என்ற கேள்வியை தமிழர்களிடத்தே விட்டுச் செல்கிறேன்.
(முற்றும்)
Alivetamil blog
0 comments:
Post a Comment