உலக வல்லாதிக்க நாடுகளெல்லாம் ஓர் அணியில் திரள்கின்றன. தத்தமது கடற்படை வீரர்களை தாங்கிய கப்பல்களை ஏடன் வளைகுடாவை நோக்கி நகர்த்துகின்றன. சர்வதேசத்தின் பார்வையானது சோமாலியா மீது திரும்புகிறது. எதற்காக? பசி, பஞ்சம், பட்டினிச்சாவு, உள்நாட்டு யுத்தம், கொடிய நோய்களான எயிட்ஸ், புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் ஏதும் அற்று வாழுகின்ற சோமாலிய மக்களின் துயரங்களை திரும்பியும் பார்க்கவிரும்பாத இந்த வல்லாதிக்க நாடுகளை, சோமாலியா நோக்கி தனது கவனத்தை ஈர்க்கவைத்தது சோமாலியக் கடற்கொளைகள் என்றால் அது மிகையாகாது. ஆம் ஒவ்வொரு ஆண்டும் ஏடன் வளைகுடாவில் கடத்தப்படும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் அதேவேளை அவர்களது அச்சுறுத்தலுக்கு உட்பட்ட கடல் பரப்புக்களும் விஸ்தரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
சில காலத்திற்கு முன்பு ஐரோப்பிய, அமெரிக்க கப்பல்கள் இந்திய பெருங்கண்டத்திற்கு பயணங்களை மேற்கொள்ள ஆபிரிக்க நாடுகளை சுற்றி வரவேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் ஆபிரிக்க துறைமுகங்களின் முக்கியத்துவம் மேலோங்கி இருந்தது. இதமூலம் அதிக கடற்பரப்பை கொண்டுள்ள சோமாலியா பல நன்மைகளை பெற்று வந்தது. ஆனால் சுயஸ்கால்வாய் வெட்டப்பட்ட பின்பு இத்தகைய ஆபிரிக்க துறைமுகங்களின் செல்வாக்கு வீழ்ச்சியுற்றது அவற்றுள் சோமாலியத் துறைமுகங்களும் குறிப்பிடத்தக்கன. மேலும் பசி, பஞ்சம், பட்டினிச்சாவால் பதிக்கப்பட்ட சோமலிய நாட்டின் அரசியல் அமைப்பிலும் உறுதியற்ற ஒரு நிலமையே நீடிக்கிறது. பல்வேறு ஆயுதக்குழுக்கள் ஆட்சி அதிகாரத்திற்காக வன்முறைகளில் ஈடுபடுகின்றமை நாட்டின் எதிர்காலத்தை மோசமான பகுதிக்குள் தள்ளுகின்றன. அடிப்படை வசதிகளுடனான அமைதியான வாழ்க்கை வாழ இயலாத மக்களே, ஒன்றை அழித்து ஒன்றைப் பெற்றுக்கொள் என்ற பாதையைத் தெரிவுசெய்தார்கள். இது காலத்தால் வளர்ச்சி பெற்று கடற்கொள்ளையாக தோற்றம் பெற்று, பிற்காலத்தில் பல வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறக்காரணமாயிற்று.
ஆபிரிக்க கடற் பயணங்கள் வீழ்ச்சி கண்டபின்பு கடல் வளங்கள் பெருக ஆரம்பித்தன இதனால் பன்னாட்டு மீன்பிடி இயந்திரப்படகுகள் சோமாலியா போன்ற ஆபிரிக்க நாடுகளின் கடற்பகுதியில் வலை வீச ஆரம்பித்தன. இதனால் சோமாலியாவின் பாரம்பரியத் தொழிலான மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டது. இதனைவிட கொடூரமான ஒரு செயல்; அமெரிக்கா போன்ற பல நாடுகளது அணுசக்தி நிறுவனங்கள் தங்களது யுரேனியக் கழிவுகள் மற்றும் இதர அணு கதிர்தாக்க கழிவுகளை ஆபிரிக்க கடற்பகுதியில் குறிப்பாக சோமாலிய கடற்பகுதியில் கொட்டுகின்றன. இதனால் அங்கு பிறக்கின்ற குழந்தைகள் அங்கவீனர்களாகவும், புற்றுநோய் போன்ற பல கொடிய நோய்களுக்கு உள்ளாகி மக்கள் அவதிப்படுகின்றார்கள். இதற்கு காரணம் சட்டவிரோதமாக அணுக்களிவுகளை பாதுகாப்பற்ற முறையில் கொட்டுவதேயாகும். ஐ.நா மன்றமும் மாந்தநேயம் பேசும் உலக நாடுகளும் வெறும் பேச்சளவிலே கண்டனங்களை தெரிவித்துக்கொண்டு இருக்கின்றனவே ஒழிய எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இந்த முதலாழித்துவ ஜாம்பவான்கள் மீது மேற்கொள்ளவில்லை. இத்தகைய அணுக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் பல கோடிகள் டொலர்கள் செலவாகும் என்பதால், கேட்பார் யாருமில்லை என்ற தைரியத்தில் சோமாலிய கடற்பகுதிகளில் குறைந்த செலவில் பாதுகாப்பற்ற முறையில் வீசுகின்றார்கள். இதற்கு எதிராக குரல் கொடுக்க திராணியற்று இருக்கிறது சோமாலிய அரசு. இதை ஒரு துருப்புச்சீட்டாக எடுத்துள்ளார்கள் இந்த கடற்கொள்ளையர்கள். சட்ட விரோத அணுக்கழிவுகளின் வீசுதலுக்கு எதிரான போராட்டத்திற்காகவே தாம் கடற்கொள்ளையில் ஈடுபடுவதாக நியாயம் கற்பிக்கின்றார்கள் கடற்கொள்ளையர்கள். இவர்களது செயற்பாடுகளிலும் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை மாறாக உள்நாட்டு ஆயுத போராட்டத்திற்கு பின்புலமாக நின்று ஊக்கம் அளிப்பதாகவே தோணுகிறது.
மரணத்தின் விழிம்பில் வாடுகின்ற சோமாலிய மக்களை மீட்டெடுக்க முன்வராத இந்த உலக வல்லாதிக்கங்கள் எதற்காக கடற்கொள்ளையர்களை பிடிப்பதற்கு மட்டும் ஒன்று கூடுகிறார்கள்? இந்த கடத்தப்படுகின்ற கப்பல்கள் யாருடையன? யார் கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்படுகின்றார்கள்? இது போன்ற பல கேள்விக்ளுக்கு பதில்; உலக வல்லாதிக்க நாடுகள், கீழத்தேச, பாமர மக்கள் பாதிக்கப்படுவதை விட கப்பல் உரிமையாளர்களான பெரும் முதலாழிகள் நட்டமடைவதை விரும்பவில்லை என்பதாகும். இந்த வல்லாதிக்க நாடுகளின் வரிசையில் இந்தியாவும் அண்மையில் இணைந்திருப்பது இவ் ஐயப்பாட்டை தெளிவுபடுத்துகிறது. ஏனெனில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை, ஆனால் இந்த முதலாழித்துவத்தை நட்டம் அடையாது காப்பாற்றுவதற்கு இன்று தனது போர்க்கப்பல்களை ஏடன் வளை குடா நோக்கி நகர்த்துகிறது இந்தியா. ஆகவே இது போன்ற முதலாழித்துவங்களின் வால்களில் பிடித்துதொங்கும் வல்லாதிக்க நாடுகளுக்கு எதிராக மனிதநேய ஆர்வலர்கள் ஓர்மமாக குரல் கொடுக்காதவரை... சோமாலியகடற் கொள்ளைகளை தடுத்தாலும், சோமாலியாவில் சட்டத்திற்கு புறம்பாக முதலாழிகள் மேற்கொள்ளும் மறைமுகக் கொள்ளைகளை தடுக்கமுடியாது.
1 comments:
nice
Post a Comment